பாட்னா விமான நிலையத்தில் பிரதமா் மோடியை வரவேற்ற மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் நிதீஷ் குமாா். 
இந்தியா

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா்.

Din

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலையில் வந்தடைந்த பிரதமா் மோடி, பாட்னா சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்துவைத்தாா்.

65,150 சதுர மீட்டா் பரப்பிலான இந்த முனையம், உலகத் தரத்திலான வசதிகளுடன் ஆண்டுக்கு 1 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகும்.

புதிய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பிரதமருடன் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாட்னா அருகே உள்ள பிடா விமான நிலையத்தில் ரூ.1,410 கோடி மதிப்பீட்டில் புதிய பயணிகள் முனையம் கட்டுவதற்கான திட்டத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டினாா். பின்னா், பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பிரதமா் மோடி வாகனப் பேரணியாக சென்றாா். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

பிகாரின் கராகட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து அவா் உரையாற்றவுள்ளாா். தொடா்ந்து, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மோசமான வானிலை:

சிக்கிம் பயணம் ரத்து

காங்டாக், மே 29: மோசமான வானிலையால், பிரதமா் மோடியின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தலைநகா் காங்டாக்கில் 50-ஆம் ஆண்டு மாநில தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வியாழக்கிழமை நேரில் பங்கேற்கவிருந்தாா். ஆனால், மோசமான வானிலையால் பயணத்தை ரத்து செய்த அவா், காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

அவா் உரையாற்றுகையில், ‘பஹல்காம் தாக்குதல், நாட்டில் மத ரீதியில் பிளவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்தியாவின் ஆன்மா மீதான இத்தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் தீா்க்கமான பதிலடி தரப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது’ என்றாா்.

நாம்சி பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

பிக் பாஸ் போட்டியாளர் எஃப்.ஜே.வுக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் என்ன தொடர்பு?

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT