பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் மற்றும் அந்த மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) அங்கம் வகிக்கும் அணியான "மகாகட்பந்தன்' (மாபெரும் கூட்டணி) அதன் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவை அடையாளப்படுத்தியுள்ளது.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை ஆளும் நிதீஷ் குமார் அரசு 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் தீவிர பிற்படுத்தப்பட்டோர் (இபிசி), மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர். பட்டியலினத்தவர் (எஸ்சி) 19.65 சதவீதமும், பழங்குடியினர் (எஸ்டி) 1.68 சதவீதமும் உள்ளனர்.
தரவுகளின்படி, தேஜஸ்வி சார்ந்த யாதவர் சமுதாயம் (ஓபிசி வகுப்பு) 14.27 சதவீதமாக உள்ளது. 1990-களில் மண்டல் ஆணைய பரிந்துரை (அரசுப் பணிகளில் ஓபிசி-களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு) அமல்படுத்தப்படும்வரை பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய உயர் வகுப்பினர், 2023-இல் மாநில அரசால் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் 15.5 சதவீதம் உள்ளதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் யாதவர் சமுதாயத்தின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
கட்சிகளுக்கு அழுத்தம்: இந்நிலையில், உயர் வகுப்பினருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுத்து அவர்களின் வாக்கு வங்கியைக் கவர முற்படும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் சற்று சவாலானதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காரணம், உயர் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் கட்டாயம், பாஜகவுக்கு மட்டுமன்றி பிற கட்சிகளுக்கும் உள்ளது.
பிகாரில் தீவிர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (இபிசி) கீழ் 113 ஜாதிகள் உள்ளன. பெரும்பாலானவை விளிம்புநிலை மக்களைக் கொண்டவை. பிண்ட், மல்லா, கேவாத், நிஷத், லோஹர், கும்ஹார், சூனார், தேலி, லோனியா போன்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சமுதாயத்தினர் பாரம்பரியமாக லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடியை 1990 முதல் ஆதரித்தனர். இதேபோன்று இஸ்லாமியர்களும் யாதவர்களும் ஆர்ஜேடியின் தீவிர வாக்கு வங்கியாக உள்ளனர்.
ஆனால், 2005-இல் முதல்வராக நிதீஷ் குமார் பதவிக்கு வந்த பிறகு இபிசிக்கள் பல்வேறு வியூகம் மூலம் ஆர்ஜேடி வசமிருந்து பிரிக்கப்பட்டனர். உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட வாரியங்கள், கிராம பஞ்சாயத்துகள் போன்றவற்றின் பதவிகளில் 20 சதவீத அளவுக்கு இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
வாக்கு வங்கி: ஆளும் ஜேடியுவை பொருத்தவரையில், 37 ஓபிசி வேட்பாளர்கள், 22 இபிசி வேட்பாளர்கள், 15 எஸ்சி வேட்பாளர்கள், ஒரு பழங்குடியின வேட்பாளர் களத்தில் உள்ளனர். உயர் வகுப்பினருக்கு 22 இடங்களை ஜேடியு ஒதுக்கியுள்ளது. தேர்தல் உடன்படிக்கையின்படி 101 இடங்களைப் பெற்ற பாஜக, உயர் வகுப்பினருக்கு 49 இடங்களை ஒதுக்கியுள்ளது.
யாதவர்களுக்கு 6, வைசியர்களுக்கு 15, குஷ்வாஹாக்களுக்கு 7, குர்மிக்களுக்கு 2 என ஓபிசிக்களுக்கு 34 இடங்களை ஒதுக்கியுள்ளது. இபிசிகளுக்கு 10 இடங்கள், எஸ்.சி.களுக்கு 12 இடங்களை பாஜக ஒதுக்கியுள்ளது.
ஆளும் கூட்டணிக் கட்சியான மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) ஒதுக்கப்பட்ட 29 இடங்களில், ராஜ்புத் சமூகத்தினருக்கும், யாதவர் சமூகத்தினருக்கும் தலா 5 இடங்கள், பாஸ்வான், பூமிஹர்களுக்கு தலா 4 இடங்கள், பிராமணர்கள், தேலி, பாசி, சூதி, ரௌனியர், கனு, ராஜ்வர், தோபி, குஷ்வாஹா, ரவிதாஸ், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு தலா ஓரிடத்தை வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தனக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் நான்கில் கட்சி மேலிடத்தின் உறவினர்களையும், எஞ்சிய இரண்டு இடங்களில் பூமிஹர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் நிறுத்தியுள்ளது. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பூமிஹர், ராஜ்புத், வைசியர் சமுதாயத்தைச் சேர்ந்த தலா ஒருவரையும், குஷ்வாஹாக்கள் மூவரையும் நிறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் நிலைமை: மகாகட்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி தான் களம் காணும் 143 இடங்களில் 51-ஐ யாதவர்களுக்கு வழங்கியுள்ளது. குர்மி - குஷ்வாஹாக்களுக்கு 18, வைசியர்களுக்கு 8, உயர் வகுப்பினருக்கு 14, இபிசிகளுக்கு 33, முஸ்லிம்களுக்கு 18 என்றவாறு அதன் வேட்பாளர்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 61 இடங்களில் 21-இல் உயர் வகுப்பினரை நிறுத்தியுள்ளது. யாதவர்களுக்கு 5, இபிசிகளுக்கு 6, வைசியர்களுக்கு 3, எஸ்சிகளுக்கு 12 என்றவாறு அதன் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், முகேஷ் சாஹ்னியின் விஐபி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியா இன்குளூசிவ் கட்சி ஆகியவை ஜாதிவாரி வாக்காளர்களை மனதில் வைத்து அவற்றின் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.
முஸ்லிம் பிரதிநிதித்துவம்: முந்தைய தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு 14 இடங்களை வழங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை நான்கு பேரை மட்டுமே நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஆர்ஜேடி 18 முஸ்லிம்களையும், காங்கிரஸ் 10 முஸ்லிம்களையும் நிறுத்தியுள்ளது. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 12 இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் மாற்று அரசியல் என்ற பெயரில் மூன்றாவது அணி போன்று களம் காணும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, இரு அணிகளையும் விமர்சித்து பரப்புரை செய்து வருகிறது. ஆனால், தேர்தலில் பிரசாந்த் கிஷோர் களம் காணாதது அவரது கட்சிக்கு பின்னடைவாகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் ஜாதிவாரி வேட்பாளர்களைவிட கட்சிக்கும் சின்னத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், பிகாரில் ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதிய வாக்குகளே ஆட்சிக்கட்டிலில் அமருவது யார் என்பதைத் தீர்மானிக்கின்றன.
இந்த வியூகம் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளுக்குப் பிறகும் பிகாரில் கைகொடுக்குமானால், அதே வியூகத்தை அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியிலும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.