பிகாரில் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், கயாவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாலம் கட்டித்தரக் கோரி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்.
பிகாரில் மோர்ஹார் ஆற்றைக் கடக்க ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்று பத்ரா, ஹெர்ஹாஞ்ச், கேவால்தி கிராமங்களைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், 77 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆற்றின்மேல் பாலம் கட்டப்படும்வரையில் வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாகவும் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் 77 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள் வந்து செல்கிறார்கள், ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. பருவமழையின்போது, ஆற்றின் நீர்மட்டம் உயரும், சில நேரங்களில் தோள்பட்டை வரை உயரும். எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஒரேயொரு பாலம் மட்டும்தான்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு, இந்த கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும், உலகத்திலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்படுகின்றன. கிராமவாசிகள் நெஞ்சுக்கு மேலான, ஆழமான நீரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மளிகைப் பொருள்களுக்காக உள்ளூர் சந்தைக்கு எளிதில் செல்ல முடியாது, குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாது, நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது.
கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் ஆற்றைக் கடந்து 39 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்’’ என்று தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.