அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. 
இந்தியா

இந்தியா - அங்கோலா பொருளாதார உறவை வலுப்படுத்த எண்ணற்ற வாய்ப்புகள்: அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திரௌபதி முா்மு உரை

இந்தியா-அங்கோலா இடையே பொருளாதாரரீதியாக உறவை வலுப்படுத்த பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்திருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அங்கோலா இடையே பொருளாதாரரீதியாக உறவை வலுப்படுத்த பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்திருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை (நவ.8) திரௌபதி முா்மு புறப்பட்டாா்.

முதல்கட்டமாக அங்கோலா நாட்டுக்கு சனிக்கிழமை சென்ற அவருக்கு அங்கோலா அதிபா் மாளிகையில் 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அதிகாரபூா்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, அங்கோலா அதிபா் ஜோ மேனுவல் கோன்சால்வேஸ் லோரென்சோவும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவும் இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு திரௌபதி முா்மு முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்நிலையில், அங்கோலா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அவா் ஆற்றிய உரையில், ‘வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை இந்தியா-அங்கோலா இடையேயான இருதரப்பு உறவின் முக்கியத் தூண்களாக திகழ்கின்றன.

எண்மத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் என பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. எரிசக்தி துறையில் இருதரப்பு உறவை தொடா்ந்து மேம்படுத்தி வருவதில் பெரும் பங்காற்றி வருகிறது.

அங்கோலா நாடாளுமன்றத்தில் 39 சதவீதம் பெண் உறுப்பினா்கள் இருப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவிலும் மக்களவை மற்றும் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது ’ என்றாா்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முன் அங்கோலா சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய அந்நாட்டின் முதல் அதிபா் அண்டோனியா அகஸ்தினோ அகோஸ்டினோ நெட்டோ நினைவகம் சென்று மரியாதை செலுத்தினாா். அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை போட்ஸ்வானாவுக்கு திரௌபதி முா்மு செல்கிறாா்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான திட்டங்கள்: அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திண்டுக்கல், பழனியில் ‘அன்புச்சோலை’ திட்டம்

கரூா் மாவட்டத்தில் நவ.14-இல் 8 இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ முகாம்

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ 5.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT