கொச்சி தம்மனத்தில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள நீர் ஆணையத்தின் தம்மனம் பம்ப் ஹவுஸில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டி திங்கள்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது தொட்டியில் தேக்கிவைக்கப்பட்டிருந்த 1.3 கோடி லிட்டர் தண்ணீர் வெளியேறியது. இதனால் அருகிலுள்ள சுமார் 20 வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
மேலும் வாகனங்கள் மற்றும் சொத்துக்களும் சேதமடைந்தன. தண்ணீர் வடிவதற்கு அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது. வீடுகளில் இருந்த தளபாடங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற வீட்டுச் சொத்துக்கள் நாசமாகின. இருப்பினும் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
நீர்த்தேக்கத் தொட்டியில் பல கசிவுகள் இருந்ததாக அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். பல முறை இதுகுறித்து கூறிய போதிலும் அதிகாரிகள் அதை சரிசெய்ய மறுத்துவிட்டனர் என்று புகார் தெரிவித்துள்ளனர். "நாங்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் உள்பட சாலையில் மக்கள் இருந்திருப்பார்கள்" என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். எர்ணாகுளம் நகரம் மற்றும் அருகிலுள்ள நகராட்சிகளின் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக பம்ப் ஹவுஸ் நீர்த்தேக்கத் தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இந்த நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்துள்ளதால் வரும் நாள்களில் இப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.