தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிவிபத்து சம்பவத்தில் அருகில் இருந்த யூடியூபரின் கேமராவில் பதிவான விடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், 24 பேர் காயமடைந்து தில்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வெடி விபத்தா? அல்லது நாசவேலையா? என்பது குறித்து, சம்பவம் நடந்து 12 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தொடர்ந்து தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என்பவரை கைது செய்துள்ளார். மேலும், சந்தேகத்துக்குரிய வகையிலான 13 பேரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அடையாளம் தெரியாத யூடியூபர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில், செங்கோட்டை அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்கிறது.
அதனைக் கேட்டு, அங்கு பதற்றமான சூழல் உருவான நிலையில், பொதுமக்கள் அனைவரும், ஓடு... ஓடு... என்ற சப்தத்துடன் பதறியடித்துக் கொண்டு ஓடுவதையும் விடியோவில் காண முடிகிறது. மேலும், வெடித்த காரின் அருகில் இருந்த ஒருவர் தலை மற்றும் காதுப் பகுதியில் ரத்தத்துடன் செல்வதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.