பிகார் தேர்தல் முடிந்த அன்றே காங்கிரஸில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று மாலை நிறைவடைந்தது. கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத வகையில், மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் குமாரின் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மகாக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சராசரியாக 70 முதல் 100 இடங்களைப் பெறலாம் என்று எதிா்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஷகீல் அகமது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது முடிவு கட்சியின் வாய்ப்புகளைப் பாதிக்காமல் இருப்பதற்காகவே வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்த நிலையில், 6.30 மணிக்கு கட்சியில் விலகுவதாக அவர் அறிவித்து கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் எம்.பி.யாகவும் இருந்த ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில், “காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். நான் ஏற்கனவே ராஜிநாமா செய்ய முடிவு செய்திருந்தேன்.
ஆனால், வாக்குப் பதிவு முடிந்த பிறகு இன்று அதை அறிவிக்கிறேன். வாக்குப் பதிவுக்கு முன் எந்த தவறான செய்தியும் வெளியேறவோ அல்லது என் காரணமாக கட்சி வாக்குகளை இழக்கவோ கூடாது என்று நான் விரும்பினேன்.
கட்சியில் இருந்து விலகுவதால் நான் வேறு எந்தக் கட்சியில் சேரப் போவதில்லை. எனக்கு அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை. என் முன்னோர்களைப் போலவே, காங்கிரஸின் கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கடைசி வரை காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தனது தாத்தா அகமது கஃபூர் 1937 இல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவரது தந்தை ஷகூர் அகமது, 1952 - 1977 ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
உடல்நலக் குறைவால் மட்டுமே விலகுவதாகவும், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், கனடாவில் வசிக்கும் தனது மகளுக்கும் அரசியலில் ஈடுபட ஆர்வமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.