தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை ஹரியாணா காவல் துறையினர் இன்று (நவ. 12) கண்டறிந்தனர்.
ஹரியாணாவின் கந்தவாலி பகுதி அருகே ஃபரிதாபாத் காவல் துறையினர் தேடுதல் பணியில் இருந்தபோது, காரை சுற்றுவளைத்து பிடித்தனர்.
தில்லி செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் மற்றொரு காரையும் வாங்கியிருந்ததாக தில்லி காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். இது தொடர்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஃபரிதாபாத் காவல் துறையினர் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை கந்தவாலி பகுதியில் கண்டறிந்தனர். தில்லி பதிவெண் உடைய இந்த கார் கந்தவாலியில் புதர் மண்டியிருந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது. அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவல் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, திங்கள் கிழமை இரவு கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ராம் லீலா திடலில் உள்ள மசூதியில் உமர் நபி தொழுகையில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து வெளியேறிய பிறகு சன்ஹெரி மசூதி வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பிற்பகல் 3.19 மணியளவில் தனது காரை நிறுத்தியுள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தபோது, அந்த காரை முகமது உமர் ஓட்டியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று விசாரணை அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க | வெளியானது ஃபரீதாபாத் பெண் மருத்துவர் ஷாஹீன் பின்னணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.