2022ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மனித மேம்பாட்டு குறியீட்டின்படி, பிகார், 27 மாநிலங்களில் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்தது.
பிகாரில், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், நாட்டின் சமுதாய மற்றும் பொருளாதார அளவீடுகளில், பிகார் மாநிலம் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருப்பது மக்களின் கவனத்தைப் பெறுகிறது.
எஸ்டிஜி எனப்படும் நிலையான வளர்ச்சி இலக்கு வரிசைப் பட்டியலில் 16 அடிப்படைக் குறியீடுகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டதில் மிகக் குறைந்த புள்ளிகளை அதாவது 57 புள்ளிகளுடன் நாட்டில் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது பிகார்.
நிதி ஆயோக் வெளியிடும் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில், பிகார் தொடர்ந்து கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
ஆனால், மொத்தம் உள்ள 113 குறியீடுகளில், குழந்தைகள் தொடர்பான 28 குறியீடுகளில் 9-ல் மட்டும் பிகார் தேசிய சராசரியை விட சற்று சிறப்பாக செயல்பட்டுள்ளது.
மேலும், எஸ்டிஜி 6-ன்படி, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் மட்டும் 98 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆனால், கடந்த 2002ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் பொறுப்பேற்றதைவிடவும், தற்போது இந்தக் குறியீடுகள் சற்று வளர்ச்சியடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
அதாவது, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவுகளில் நாட்டின் சராசரியை விடவும், பிகார் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் பிகார் மாநிலத்தின் மக்கள் வாழும் நிலைக் குறியீடு இந்திய சராசரியை நெருங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலமாகவே பிகார் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஆயோக் வெளியிட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு பட்டியலின்படி, பிகாரில் மூன்றில் ஒருவர் அதாவது 33.76 சதவித மக்கள் ஏழைகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019 - 2021-தரவுகளின்படி, 96 சதவீத வீடுகளுக்கு மின் வசதி கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது 2005 - 06ஆம் ஆண்டு தரவுகளின்படி, பிகாரில் நான்கில் ஒரு வீடு மட்டுமே மின் வசதி பெற்றிருந்ததாகவும், அப்போது நாட்டின் சராசரி அளவு மூன்றில் இரண்டு வீடுகள் மின் வசதி பெற்றவை என்று கூறப்படுகிறது.
இதன்படி பார்த்தால், கடந்த 15 ஆண்டுகளில் பிகார், மின்சார வசதியில் 250 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் பள்ளிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2019 - 21ஆம் ஆண்டுகளில் 29 சதவிகிதமாக இருந்தது அப்போது இந்தியாவின் சராசரி 41 சதவீதம். ஆனால், பிகாரில் தற்போது வளர்ச்சியடைந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு
அண்மை ஆண்டுகளில், பிகாரில் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளதாம். 2005 - 06ஆம் ஆண்டுகளில் 22 சதவிகித குழந்தை பிறப்புதான் மருத்துவமனைகளில் நடந்துள்ளது. ஆனால், 2019 - 21ஆம் ஆண்டுகளில் இது 76 சதவிகிதமாக மாறியிருக்கிறது.
எனவே, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், பிகார் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும், அதன் முந்தைய கால தரவுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு நல்ல வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.