பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 14) காலை முதல் நடைபெற்று வருகின்றது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகின்றது.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் சட்டப்பேரவை மற்றும் ஜம்மு - காஷ்மீர், ஒடிசா இடைத்தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“நாங்கள் மக்களின் பணியாளர்கள். எங்களின் கடின உழைப்பின் மூலம் நாங்கள் மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளோம். மேலும், நாங்கள் மக்களின் இதயங்களைக் கொள்ளை அடித்துள்ளோம். அதனால்தான், ஒட்டுமொத்த பிகாரும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி வேண்டுமென முடிவு செய்துள்ளது.
நான் காட்டாட்சி குறித்து பேசுகையில், ஆர்ஜெடி கட்சி எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், எனது பேச்சு காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டும் பாதிக்கின்றது. இன்று, காட்டாட்சி ஒருபோதும் பிகாருக்குத் திரும்பாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிகார் மக்கள் வலிமையான பிகாருக்காக வாக்களித்துள்ளனர்.
இன்றைய வெற்றி பிகாரில் ஒரு புது விதமான எம்.வொய். தத்துவத்தை உருவாக்கியுள்ளது. அதுதான் மகிளா (மகளிர்) மற்றும் யூத் (இளைஞர்கள்). இன்று, நாட்டில் அதிகளவிலான இளைஞர்கள் உள்ள மாநிலங்களில் பிகாரும் ஒன்று. அனைத்து மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களது கனவுகளையும் நோக்கங்களையும் கடந்த காட்டாட்சி முழுவதுமாக அழித்துவிட்டது.
நான் ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டா மற்றும் ஒடிசாவின் நுவாபாடா மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்துள்ளனர். இது தே.ஜ.கூட்டணிக்கான வெற்றி மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கான வெற்றி. இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான வெற்றி.
இந்தத் தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக வாக்குப்பதிவு, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சுரண்டப்பட்டவர்களின் வாக்குகள் அதிகரிப்பு இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் சாதனைகளாகும்.
ஒரு காலத்தில், பிகாரில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் ஆதிக்கம் செலுத்தியபோது நக்சல் பாதிப்புகள் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்து விடும். ஆனால், இந்தத் தேர்தலில் பிகார் மக்கள் பயமின்றி, உற்சாகத்துடன் வாக்களித்துள்ளனர். அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்களித்துள்ளனர்" என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இதையும் படிக்க: ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.