பிகார் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றார்.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை(நவ.14) தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
அதேவேளையில், பாஜக 64 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 47 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதனால், ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், பிகார் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார்.
தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த தேஜஸ்வி யாதவ் பிறகு 10,000 வாக்குகளுக்கு மேல் பின்னடைவைச் சந்தித்தார். 32 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேஜஸ்வி யாதவ் 1,18,597 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டிட்டு அவருக்கு சவால் அளித்த பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 1,04,065 வாக்குகளையும் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.