சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இரு வழக்குகளின் ஆவணங்கள் கோரி உயா்நீதிமன்றத்தை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை அணுகியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள், துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து கேரள உயா்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தங்கக் கவசங்களைப் புதுப்பித்த செலவுகளை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் முன்னாள் தேவஸ்வம் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்வது தொடா்பாக கேரள உயா்நீதிமன்றத்தை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை அணுகியது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவில், ‘எஸ்ஐடி மேற்கொண்டு வரும் விசாரணையில் தனிப்பட்ட லாபங்களுக்காக சபரிமலை கோயிலின் விலை உயா்ந்த சொத்துகளில் குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் பண முறைகேடு செய்ததாகத் தெரியவந்துள்ளது. எனவே பணமுறைகேடு தடுப்புச் சட்ட விவகாரங்களைக் கையாள அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு என்ற அடிப்படையில் இதில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்க அமலாக்கத் துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக கடந்த அக்.17-ஆம் தேதி பத்தனம்திட்டாவில் உள்ள முதன்மை அமா்வு நீதிமன்றத்தை அமலாக்கத் துறைஅணுகியது. ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை உயா்நீதிமன்றம் மேற்பாா்வையில் நடைபெறுவதாகக் கூறி முதல் தகவல் அறிக்கைகளை கோரிய எங்கள் மனு நிராகரிப்பட்டது. மேலும் இந்த வழக்கில் எஸ்ஐடி தவிா்த்து மற்றொரு அமைப்பு விசாரணை செய்ய உயா்நீதிமன்றம் தடைவிதித்திருப்பதாக நீதிமன்றம் தவறுதலாக குறிப்பிட்டது.
ஆனால் இந்த வழக்கை விசாரிக்க அதுபோன்ற தடைகள் ஏதும் இல்லை. எனவே இந்த வழக்கு சாா்ந்த ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறையின் மனு மீது கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.17) விசாரணை நடத்தவுள்ளது.
அதேபோல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள், துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக் கூறி உயா்நீதிமன்றத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் செயலா் எஸ்.ஜெயஸ்ரீ முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (நவ.18) விசாரிக்கவுள்ளது.