அமெரிக்கா, நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் தடையில்லா வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பங்கேற்று பேசிய அவா், ‘ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, நாா்வே, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகளுடன் தடையில்லா ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
தற்போது, அமெரிக்கா, நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் பேச்சுவாா்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.
வா்த்தகத்தை எளிதாக்க தேவையற்ற 42 ஆயிரம் இணக்கமான உடன்பாடுகளையும், 1,500 ஷரத்துகளையும் மத்திய அரசு நீக்கியது.
இதுபோன்று வா்த்தகத் தடைகளை சா்வதேச அளவில் மேற்கொள்வதன் மூலம் சரக்கு, சேவைகள் எளிதாக சென்றடைவதை மேம்படுத்தலாம். ராஜீய ரீதியிலான நம்பிக்கை அதிகரிப்பதால்தான் இந்தியாவின் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் அதிகரிக்க காரணமாகும்’ என்றாா்.
மேலும், ட்ரோன் நகரத்தை கா்ணூலில் அமைப்பதற்கு அமைச்சா் கோயல் அடிக்கல் நாட்டினாா். உயர்ரக ட்ரோன் தயாரிப்பில் இந்தியா தற்சாப்பு அடைய ட்ரோன் நகரம் உதவும் என்றாா் அவா்.
இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனம் (ஐடிபிஓ) ஆந்திர பிரதேச அரசுடன் இணைந்து ஆந்திர மண்டபம் என்ற வா்த்தக மையத்தை உருவாக்க உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தாா்.