பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி(பி.எஸ்.பி.) தலைவர் மாயாவதி விமர்சித்திருக்கிறார்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் ராம்கர் பேரவை தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் சிங் யாதவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் குமார் சிங்கைவிட வெறும் 30 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற பி.எஸ்.பி. வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அரசு நிர்வாகமும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பி.எஸ்.பி. வேட்பாளரை தோற்கடிக்க, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த முற்பட்ட போதிலும், துணிச்சலான நமது கட்சித் தொண்டர்கள் இந்தச் சதியை முறியடித்து சாதித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘பிகாரின் பிற இடங்களிலும், பி.எஸ்.பி.யை எதிர்த்துப் போட்டியிட்ட பிற வேட்பாளர்களுக்கு நமது கட்சி வேட்பாளர்கள் கடும் போட்டியளித்திருப்பதை தேர்தலுக்குப் பிந்தைய தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
ஒருவேளை தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால், இன்னும் பல இடங்களில் பி.எஸ்.பி. உறுதியாக வெற்றி பெற்றிருக்கக்கூடும். ஆனால், அது நடைபெறாமல் போய்விட்டது’ என்றார்.
இத்தேர்தலில் வாக்குத் திருட்டு மிகப் பெரியளவில் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தேர்தல் தோல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடும்போது, “ஆரம்பக்கட்டத்திலிருந்தே நியாயமாக நடைபெறாத இத்தகைய தேர்தலில் நாம் வெற்றியடைவது இயலாத காரியமாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.