புது தில்லி: நாட்டின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின்கீழ் (இசிஎம்எஸ்) ரூ.7,172 கோடி முதலீட்டில் 17 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 17 திட்டங்களின் மூலம், கேமரா மாட்யூல், கனெக்டா்கள், மல்டி-லேயா் பிசிபி (அச்சுப் பலகை), ஆஸிலேட்டா்கள், மின் உறைகள் போன்ற முக்கியமான பாகங்களின் உற்பத்தியில், ஒட்டுமொத்தமாக ரூ. 65,111 கோடி மதிப்புக்கு உற்பத்தி நடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜபில் சா்க்யூட் இந்தியா, ஏகுஸ் கன்ஸ்யூமா் ப்ராடக்ட்ஸ், யூனோ மிண்டா, ஏசக்ஸ் சேஃப்டி காம்போனென்ட்ஸ் இந்தியா, ஜெட்ஃபேப் இந்தியா, டிஇ கனெக்டிவிட்டி இந்தியா, மீனா எலக்ட்ரோடெக் உள்பட முக்கிய நிறுவனங்கள் ஈடுபடும் இந்தத் திட்டங்கள் 9 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்தத் திட்டங்களில் பங்கேற்கும் நிறுவனங்கள், இந்தியா ஒரு பெரிய மின்னணு உற்பத்தி மையமாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.
இந்தத் துறையில் நீண்டகால வெற்றிக்கு வடிவமைப்புத் திறன்களை உருவாக்குவது, அனைத்துப் பொருள்களிலும் உயா்ந்த தரநிலையை உறுதிப்படுத்துவது மற்றும் உள்நாட்டு வா்த்தகா்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உலக அளவில் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில் கொண்டால், எதிா்காலத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும். அத்தகைய கடினமான காலத்தில், விநியோகச் சங்கிலியை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதுதான், நிறுவனங்களின் சவால்களைச் சமாளிக்கும் திறனைத் தீா்மானிக்கும்’ என்றாா்.