ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சாரியா குடும்பச் சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மேலும் மூன்று சகோதரிகளும் பாட்னாவில் உள்ள லாலுவின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி, குடும்பச் சண்டையாக வலுத்திருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய ரோஹிணி, தன்னுடைய சிறுநீரகத்தை தந்தைக்கு தானமளித்ததால், தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டதாகவும், பல கோடி ரூபாயை ஏமாற்றவும், மக்களவை தொகுதி கேட்டதாகவும் தன்னை குற்றம்சாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய சகோதரிகள் ராகிணி, சாந்தா, ராஜலஷ்மி ஆகியோரும் பாட்னாவில் உள்ள பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகவும் ரோகிணி குறிப்பிட்டுள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். இரண்டு மகன்களும், ஏழு மகள்களும் உள்ளனர். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், அரசியலில் தீவிரமாக இருந்தார். அவர் பிகார் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் திடீரென அவரை லாலு பிரசாத் கட்சியிலிருந்து நீக்கினார்,
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், தற்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆனால், இது தொடர்பாக குடும்பத்தினருக்குள் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவை வெளியாகாமல் உள்ளுக்குள்ளேயே புகைந்துகொண்டிருந்த நிலையில் தற்போது பிகார் பேரவைத் தேர்தல் , எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரோஹிணி வீட்டை விட்டு வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூறியிருக்கும் தேஜ் பிரதாப், நேற்று நடந்த சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. என்னுடைய சகோதரிக்கு நடந்திருக்கும் அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை அவமானப்படுத்தினால் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால், அவரை அவமானப்படுத்தினால் தாங்க முடியாது. அவருக்கு நடந்த அவமரியாதை மிகவும் பயங்கரமானது என்றும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.