மகாராஷ்டிரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியை 100 தோப்புக்கரணம் போட வைத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், பால்கரின் வசாய் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் கடந்த 8ஆம் தேதி பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறி மாணவி காஜல் மற்றும் பல மாணவர்களை புத்தகப் பையுடன் 100 தோப்புக்கரணம் போடச் சொல்லி ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார்.
மாலை வீடு திரும்பிய காஜலுக்கு உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவர்கள் அவரை மும்பையில் உள்ள ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும் மாணவி காஜல் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி பலியானார்.
தோப்புக்கரணம் போட்டதால் முதுகு வலி இருப்பதாக காஜல் தெரிவித்ததாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்து பலியானதாக அவரது தாயார் ஷீலா கவுட் தெரிவித்தார். மேலும் தனது மகள் பள்ளிக்கு 2 நிமிடங்கள் அல்லது 3 நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருக்கலாம் என்றார்.
இதுகுறித்து மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு வாலிவ் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காஜலுக்கு ஆஸ்துமா இருப்பதாகவும், பையின் கூடுதல் எடையை சுமந்துகொண்டு தோப்புக்கரணம் போட்டதால் உட்புற ரத்தப்போக்கு ஏற்பட்டு பலியானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.