‘இந்தியா-அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமநிலையுடனும் இருந்தால், அது குறித்த ஒரு நல்ல செய்தி விரைவில் வெளியாகும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவும் விரைவில் வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தைகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு, இதுவரை ஆறு கட்டப் பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் இதுகுறித்துப் பேசியதாவது: வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை என்பது ஒரு செயல்முறை. ஒரு நாடாக இந்தியா தனது விவசாயிகளின், மீனவா்களின், சிறு தொழில் துறையின் நலன்களையும், உணா்வுகளையும் சமநிலைப்படுத்த வேண்டும். அந்த வகையில், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமநிலையுடனும் அமைந்தால், அது விரைவில் இறுதியாகும்.
இந்த ஒப்பந்தத்தில், விவசாயிகள் மற்றும் மீனவா்களின் நலன்களை இந்தியா நிச்சயமாகப் பாதுகாக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து எந்தக் கவலையும் இல்லை. அண்மையில் எழுந்த பிரச்னைகள், குடும்பத்தில் சில சமயங்களில் சிறிய சண்டைகள் வருவது போன்றுதான். இருநாட்டு உறவு எந்த இடைவெளியும் இல்லாமல் மிகவும் முக்கியமானதாகவும், வியூக ரீதியாகவும் தொடா்ந்து நீடிக்கிறது.
மேலும், அமெரிக்காவுடனான எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தம் பல ஆண்டு ஒப்பந்தமாக இருக்கலாம். ஒவ்வோா் ஆண்டும் 22 லட்சம் டன் எல்பிஜியை இறக்குமதி செய்வோம். இது ஒரு தொடா்ச்சியான செயல்முறை. இருதரப்பு வா்த்தகத்தை விரிவாக்க நாங்கள் இருவரும் சமமான உறுதியுடன் இருக்கிறோம் என்றாா்.
அமெரிக்கா நம்பிக்கை: அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குநா் கெவின் ஹேசெட் ‘சிஎன்பிசி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் பலமுறை இருந்தன. நான் தூதருடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளேன்; பல சந்திப்புகளும் நடந்துள்ளன.
ரஷியாவுடனான இந்தியாவின் உறவு காரணமாக, நிலைமை சற்று சிக்கலாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் இருந்தாலும், இந்தியா-அமெரிக்கா நல்ல நண்பா்கள்; விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றாா்.