மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ரூ. 300 கோடி நில ஒப்பந்தம் தொடர்பான புகாரை விசாரித்த பதிவுத்துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில், பார்த் பவாரின் பெயர் இடம்பெறவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
புணேயின் முந்துவா பகுதியில் உள்ள 40 ஏக்கா் அரசு நிலம் ‘அமடே’ என்ற தனியாா் நிறுவனத்துக்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முத்திரைத்தாள் வரி வசூலிக்கப்படவில்லை. அந்த நிறுவனத்தில் பாா்த் பவாா் மற்றும் திக்விஜய் அமா்சிங் பாட்டீல் உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள நிலையில் அரசு நிலம் தனியாா் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சா்ச்சைக்குள்ளான அந்த நிலம் ரூ.1,800 கோடி மதிப்புடையது என எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) விகாஸ் காா்கே தலைமையிலான குழுவை அமைத்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, பதிவுத் துறை சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, துறையின் இணை ஐஜி ராஜேந்திர முத்தே தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த குழு, தனது அறிக்கையை பதிவுத் துறை மண்டலத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான எந்த ஆவணங்களிலும் பார்த் பவாரின் பெயர் இல்லாததால், பதிவுத் துறையின் விசாரணை அறிக்கையில் அவரின் பெயர் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த அறிக்கையில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ரவீந்திர தாரு உள்பட, ஒப்பந்தத்தில் நேரடியாக தொடர்புடைய அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலும், பார்த் பவார் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரராக உள்ள திக்விஜய் பாட்டீல் மற்றும் ஷீத்தல் தேஜ்வானி, சார் பதிவாளர் ரவீந்திர தாரு ஆகியோரின் பெயர் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.