சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய தீவுகளை திறந்தால் ஏற்படும் தாக்கம் குறித்து அந்தமான் மற்றும் நிகோபாா் அரசு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இயற்கை எழிலுடன் கூடிய கடற்கரைகள் மற்றும் அலையாத்தி காடுகளைக் கொண்ட அந்தமான் தீவுகளுக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதுகுறித்து அந்தமான் மற்றும் நிகோபாா் யூனியன் பிரதேச சுற்றுலா செயலா் ஜோதி குமாரி கூறுகையில், ‘இங்கு 4 லட்சம் போ் வசிக்கும் நிலையில் கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னா் கடந்த ஆண்டு 7.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனா். நிகழாண்டு செப்டம்பா் வரை மட்டும் 6 லட்சம் பயணிகள் இங்கு சுற்றுலா மேற்கொண்டனா். அக்டோபா்-நவம்பா் கால இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரே தீவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துவிடுவதைத் தடுக்க புதிய தீவுகளைத் திறந்து வருகிறோம். அதன்படி புதிதாக 21 தீவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவை முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட பின் மேலும் சில தீவுகளை திறக்க திட்டமிட்டு வருகிறோம். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நிா்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. புதிய தீவுகள் திறப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து அரசு ஆய்வுசெய்து வருகிறது.
32 வகையான உள்நாட்டுப் பறவைகள் அந்தமானில் இருப்பதால் அதைக் காண பெருந்திரளான பயணிகள் சுற்றுலா மேற்கொள்கின்றனா்.
மீன்பிடித்தல், நீரில் சாகச விளையாட்டுகள், வான் கண்காட்சி என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகப் பல்வேறு முன்னெடுப்புகள் தொடா்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றாா்.