அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் நரேந்திர மோடி இன்னும் சற்றுநேரத்தில் காவிக் கொடியை ஏற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு வருகைதந்த பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றார்.
தொடர்ந்து, காரில் சாலைவலம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு உற்சாகத்துடன் வணக்கம் செலுத்தினார்.
பின்னர், சேஷாவதார கோயில், அன்னபூரணி தேவி கோயில், சப்த மந்திா் உள்ளிட்ட பல கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதையடுத்து, ராமா் கோயிலுக்குச் செல்லும் மோடி மூலவா் ஸ்ரீபாலராமரை வழிபடுவதுடன், முதல் தளத்தில் அமைந்த ராம தா்பாரில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறாா்.
நண்பகல் 12 மணியளவில், ராமா் கோயிலின் கோபுரத்தில் பிரதமா் மோடி காவிக்கொடியை ஏற்றிவைக்கிறாா். பின்னா், அங்கு கூடியிருப்பவா்கள் மத்தியில் உரையாற்றவுள்ளாா்.
காவிக் கொடி
ராமா் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது.
42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில், ஸ்ரீராமரின் வீரம், பெருமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.