உலக தொழில்நுட்பத்தின் மையம் இந்தியா! பிரதமர் மோடி
தில்லி ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பற்றி...
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார்.
மோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
“உலக வரலாற்றில் மிக சிறப்புமிக்க ஏஐ உச்சி மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பத் தொகுப்பின் மையமாக இந்தியா திகழ்கிறது. ஏஐ மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது, உலகின் தெற்குப் பகுதிக்கு பெருமையை சேர்க்கும் விஷயம்.
முதன்முதலில் வயர்லெஸ் மூலம் சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது, ஒருநாள் முழு உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்பதை யாரும் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. செய்யறிவும் மனித வரலாற்றின் அத்தகைய மாற்றமாகும். இன்று நாம் காண்பதும், கணிப்பதும் அதன் தாக்கத்தின் தொடக்கம்தான்.
ஏஐ இயந்திரங்களை அறிவுசார்ந்ததாக உருவாக்குகிறது. ஆனால், அதைவிட மனித திறன்களை பலமடங்கு அதிகரிக்கிறது. ஒரேவொரு வித்தியாசம் என்னவென்றால், இந்த முறை அதன் வேகமானது முன்னெப்போதும் கண்டிராத எதிர்பாராதது. முன்பெல்லாம் தொழில்நுட்பத்தின் தாக்கல் தெரிய பல தசாப்தங்கள் ஆகும். ஆனால், தற்போது இதுவரை இல்லாத வேகத்திலும் ஆழத்திலும் உள்ளது.
உலக இளைஞர்கள் ஏஐ-யை ஏற்றுக் கொண்டு அதனை தங்களுக்கு சொந்தமாக்கும் வேகம் பாராட்டுக்குரியது. நமது பார்வை பெரிதாக இருக்க வேண்டும், அதே அளவுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு எந்த வடிவில் ஏஐ-யை ஒப்படைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செய்யறிவு என்ன செய்யும் என்பது கேள்வி அல்ல, தற்போதைய சூழலில் செய்யறிவுடன் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்.
திறன் மேம்பாடு, மறுதிறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றை பழக்கமாக மாற்ற வேண்டும். செய்யறிவுடன் ஒன்றிணைந்து முன்னேறினால், மனிதகுலத்தின் திறனை உயர்த்தும். ஏஐ என்பது ஒரு மாற்றும் சக்தி. இலக்கு இன்றி இருந்தால் அது இடையூறாக மாறும், சரியான இலக்கு இருந்தால் அது தீர்வாக மாறும்.
ஏஐ-க்கு பரந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், ஜிபிஎஸ் போல, கட்டுப்பாட்டை நமது கைகளில் வைத்திருக்க வேண்டும். ஜிபிஎஸ் நமக்கு வழிகாட்டுகிறது, ஆனால், எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற இறுதி முடிவு நம்முடையதுதான். அதுபோல், இன்று நாம் செய்யறிவை எந்த திசையில் கொண்டு செல்கிறோம் என்பதே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்.
India is the center of world technology! Prime Minister Modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.