தில்லியில் மோசமான காற்று மாசால் தன் மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தாய் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
தில்லியில் காற்று மாசு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாக தில்லி மாறி வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தொடர்ந்து 'மிகவும் மோசம்' பிரிவில் காற்றின் தரம் நீடிக்கிறது. தில்லி காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றன.
இந்நிலையில் தில்லியில் அதிகமான காற்று மாசால் தன் மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாக குழந்தையின் தாய் சாக்ஷி இன்ஸ்டா பக்கத்தில் ஆதங்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவர் தன் மகன் மருத்துவமனையில் இருக்கும் விடியோவைப் பதிவிட்டு,
"தில்லி காற்று மாசுபாடு, நாம் சுவாசிக்கும் காற்றை மட்டும் பாதிக்கவில்லை.. என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தில்லிக்கு குடிபெயர்ந்தோம், அன்றிலிருந்து மகனுக்கு சளி, இருமல், அலர்ஜி, சுவாசப் பிரச்னைகள் தொடங்கியது.
எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. மாறாக மேலும் அதிகரித்த காற்று மாசுபாடு, என் மகனின் உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது. மகனுக்கு தொண்டை மற்றும் மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வலியில் அவன் மருத்துவமனையில் அழுவதைப் பார்த்து நாங்கள் மிகவும் மனதளவில் உடைந்துவிட்டோம்.
தில்லியில் உள்ள குழந்தைகளின் நிலை இதுதான். ஆனால் இந்த அரசு இன்னும் அமைதியாக இருக்கிறது.
நாங்கள் வரி செலுத்துகிறோம். அதற்கு பதிலாக எங்கள் குழந்தைகள் பெறுவது இதுதான். தில்லி காற்று மாசு குறித்து பேச வேண்டிய நேரம் இது" என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலரும் சாக்ஷியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரது மகன் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.