புது தில்லி: உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அளிக்கும் தீர்ப்பை வேறு நீதிபதி மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர், தனது ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது.
ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்துக்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளாமலும் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வுகள் இவ்வாறு தீர்ப்புகளை மாற்றுகின்றன.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கம்: குறிப்பிட்ட சட்டப் பிரச்னையில் ஓர் அமர்வு (நீதிபதிகள் அமர்வு) அளிக்கும் தீர்ப்பு சச்சரவுக்கு முடிவு காண வேண்டும். அந்தத் தீர்ப்பின் மூலம் வழக்கு நிறைவு செய்யப்பட்டதாகக் கருதி, அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறையின்படி அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கமாக உள்ளது. ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அதுதொடர்பான வழக்கில் வித்தியாசமான கண்ணோட்டம் ஏற்பட்டு அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அனுமதித்தால், அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கத்தைத் தோல்வியடையச் செய்துவிடும்.
ஓர் அமர்வு தீர்ப்பளித்த வழக்கை வேறு அமர்வு விசாரித்தால், அது வழக்கில் வேறு தீர்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு, நீதிமன்றத்தின் அதிகாரம், உரிமை, தீர்ப்புகள் மீதான மதிப்பு ஆகியவற்றை வலுவிழக்கச் செய்யும்.
முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பை பின்னர் அளிக்கப்படும் தீர்ப்பால் மாற்றுவதன் மூலம், நீதி பரிபாலனம் சிறப்பாக செய்யப்பட்டதாக அர்த்தமாகாது என்பதே எங்களின் (நீதிபதிகள்) நிலைப்பாடு.
வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புகள் இறுதியானது, மாற்றமுடியாதது என்று நிலைநிறுத்துவதன் மூலம், வழக்குகள் முடிவில்லாமல் தொடர்வதைத் தடுப்பதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையும் நிலைநிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.
திட்டத்தைத் தொடங்கிய பின்னர் விதிவிலக்கான சூழலில் முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்குத் தடையில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அண்மையில் தீர்ப்பளித்தது.
இதன்மூலம், சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு முன்தேதியிட்டு வழங்கத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அபே.எஸ்.ஓகா அமர்வு ஏற்கெனவே அளித்தத் தீர்ப்பை கவாய் அமர்வு திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதேபோல மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பளித்தது.
ஆனால் அவ்வாறு ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிப்பது பொருத்தமற்றது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அண்மையில் விளக்கம் அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.