ஆன்மிக, கலசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கர்நாடகம் வந்துள்ள பிரதமர் மோடி கோயில் நகரமான உடுப்பியில் சாலைவலம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்குச் சென்றார். அங்கிருந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்துக்கு கார் மூலம் சாலைவலம் மேற்கொண்டார்.
பிரதமர் தனது வாகனத்தில் நின்றபடி உற்சாகமான கூட்டத்தினரை நோக்கி கையசைத்தார், வழிநெடுக மலர்களை தூவி பிரதமர் மோடியை மக்கள் வரவேற்றனர். காவி நிற மலர் அலங்காரங்கள் மற்றும் பாஜக கொடிகள் வழியெங்கும் கட்டப்பட்டிருந்தன.
கடலோர கர்நாடகத்தின் மரபுகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார குழுக்களின் நிகழ்ச்சிகளால் கொண்டாட்ட சூழல் ஏற்பட்டது.
பிரதமர் மோடி உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கு தலைமை தாங்கும் பர்யாய சுவாமிஜியிடமிருந்து ஆசிர்வாதங்களையும் பெற்றார்.
பின்னர், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்தில் நடைபெறும் பகவத்கீதை பாராயண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்வில் பிரதமருடன் சோ்ந்து மாணவா்கள், துறவிகள், அறிஞா்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம் போ் ஒன்றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்தில் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அடுத்ததாக பிற்பகல் கோவாவின் கனகோனா பகுதியில் உள்ள ஸ்ரீசம்ஸ்தான் கோகா்ண பா்த்தகளி ஜீவோத்தம மடத்தின் 550-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா்.
இந்த மடத்தில் நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர ராமா் வெண்கலச் சிலையையும், ராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பூங்காவையும் அவா் திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்வின் நினைவாக சிறப்பு அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமா் வெளியிட்டு, உரையாற்ற இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.