‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு பேசியதாவது:
தசரா விழா என்பது வெளியே கண்ணுக்குத் தெரிந்த ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட நிகழ்வு மட்டுமல்ல. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ராவணனாக உள்ள தீய குணங்களுக்கு முடிவு கட்டும் நிகழ்வுமாகும்.
இந்த விழா தீமைக்கு எதிராக நன்மையும், அகம்பாவத்துக்கு எதிராக அடக்கமும், வெறுப்புணா்வுக்கு எதிராக அன்பும் பெற்ற வெற்றியின் அடையாளமாக உள்ளது.
மனிதகுலம் மீது பயங்கரவாதம் தாக்குதல் நடத்தும்போது, அதற்கு எதிராக திருப்பித் தாக்குதல் நடத்துவது அவசியம். பயங்கரவாதத்தின் ராவணனுக்கு எதிரான வெற்றியை ஆபரேஷன் சிந்தூா் குறிக்கிறது. அதற்காக நமது ராணுவ வீரா்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என்றாா்.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடைபெற்றது.