டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது; மேலும், பலரைக் காணவில்லை.
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள டார்ஜிலிங் மாவட்டப் பகுதிகளில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே.வங்கம் - சிக்கிம் இடையிலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மிரிக், ஜோர்பங்லோ, சுகியாபோக்ரி, டார்ஜிலிங் சதர் மற்றும் புல்பஜார் ஆகிய இடங்களில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அங்கு மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
காணொலி: @BigMoozy87 எக்ஸ் பதிவு
பாலம் இடிந்தது:
கனமழையால் டார்ஜிலிங் மாவட்டத்தின் துதியா பகுதியில் பாலசன் ஆற்றில் கட்டப்பட்டிருந்த இரும்புப்பாலம் இடிந்து விழுந்ததால், சிலிகுரி - மிரிக் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 393 மி.மீ. மழைப்பொழிவு:
மழை நிலவரம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் பேசும்போது, “டார்ஜிலிங் மாவட்டத்தின் கர்சாங்க் பகுதியில் அக். 5 காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 393 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது” என்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது.
மாநில பேரிடர்மீட்புக் குழுவினரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் டார்ஜிலிங்கில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவுகளால் பல இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவது சவாலாக மாறியிருப்பதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்:
டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மீட்புப் பணிகள் வெற்றிகரமாக அமையவும் காயமடைந்தவர்கள் குணம்பெறவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை முடிவடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறைக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங் வருகை தந்திருக்கும் நிலையில், கனமழை, நிலச்சரிவுகளால் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவின்பேரில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள், உதவி தேவைப்படுவோர் + 91 33 2214 3526 | +91 33 2253 5185 | + 91 86979 81070 | 1070 | +91 91478 89078 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு டார்ஜிலிங் காவல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.