போலி தொழில்நுட்ப சேவை மோசடி தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) அடிப்படையில் தொடங்கப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனைகள் நடந்து வருகின்றன.
தில்லியில் உள்ள ரோகிணி, பஸ்சிம் விஹார் மற்றும் ரஜோரி கார்டனில் இயங்கும் பல போலி அழைப்பு மையங்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்தி வந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மையங்கள் புகழ்பெற்ற உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு வெளிநாட்டினரைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சில வழக்குகளில், மோசடி செய்பவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்யப்படுவதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய கிரிப்டோ பணப்பைகள் மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்த முதற்கட்ட கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.
இதன் முழு வலையமைப்பையும் கண்டறிந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயனாளிகளை அடையாளம் காண்பதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என்று அமலாக்கத்துறை கூறியது.
பணமோசடி வழக்கை வலுப்படுத்த டிஜிட்டல் சான்றுகள், நிதி பதிவுகள் மற்றும் பிற குற்றஞ்சாட்டக்கூடிய பொருள்களைச் சேகரிப்பதற்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மோசடி நடவடிக்கைகளுக்கு உதவியது குறித்துப் பல சந்தேக நபர்கள் தற்போது விசாரணையின் கீழ் உள்ளனர்.
வெளிநாட்டுக் குடிமக்களைக் குறிவைத்து சைபர் சார்ந்த நிதி குற்றங்களுக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.