ஹரியாணாவின் காவல் துறை தலைமை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் தனது இல்லத்தில் துப்பாக்கியாச் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீட்டின் கீழ் தளத்தில் மகள் வசித்து வரும் நிலையில், மேல் தளத்தில் தனது பயிற்சி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் கன்வர்தீப் கெளர் கூறுகையில், ''எண் 116, செக்டார் 11-ல் உள்ள இல்லத்தில் பூரன் குமார் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பிற்பகல் 1.30 மணியளவில் அவர் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் படுக்கை அருகே துப்பாக்கி மீட்கப்பட்டது. தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
பூரன் குமாரின் மனைவி அம்நீத் பி குமார் ஐஏஎஸ் அதிகாரியாவார். நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ஹரியாணா மாநிலத்தில் சேவையாற்றி வரும் அவர், தனது பணி நிமித்தமாக ஜப்பான் சென்றுள்ளார்.
பூரன் குமார் 2000ம் ஆண்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவரின் மனைவி 2001ஐ சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். தற்போது வெளியுறவுத் துறையின் செயலாளராக உள்ள இவர், புதன்கிழமை வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து நன்மதிப்பைப் பெற்ற பூரன் குமாரின் தற்கொலை காவல் துறையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பாஜக எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்த மமதா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.