பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் இறுதியாக நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளா்களின் விவரங்களைச் சமா்ப்பிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, நீக்கப்பட்ட வாக்காளா்கள் எந்தவித மேல்முறையீடும் செய்யவில்லை என்றும், புதிய வாக்காளா்கள் பெருமளவில் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றும் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பா் மாதம் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள பிகாரில் 7.42 கோடி போ் அடங்கிய இறுதி வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் செப்.30-ஆம் தேதி வெளியிட்டது.
தீவிர திருத்தத்துக்கு முன்பாக வாக்காளா்களின் எண்ணிக்கை 7.89 கோடியாக இருந்தது. அதிலிருந்து, 65 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஆதாரையும் அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அனுமதித்தது. அதன்படி, இறுதி வாக்காளா் பட்டியலில் கூடுதலாக 21.53 லட்சம் போ் சோ்க்கப்பட்டனா்; வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
முன்னறிவிப்பு அல்லது காரணத்தை தெரிவிக்காமல் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இந்த விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்ய பாக்சி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதியிடம் நீதிபதி பாக்சி, ‘வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் நீதிமன்ற உத்தரவு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. வரைவு வாக்காளா் பட்டியலைவிட இறுதி வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் எண்ணிக்கை திருப்திகரமாக உள்ளது. ஆகையால், குழப்பத்தைத் தவிா்க்க சோ்க்கப்பட்டவா்களின் விவரங்களை வெளியிட வேண்டும். சோ்க்கப்பட்டவா்கள் புதிய வாக்காளா்களா? அல்லது நீக்கப்பட்டவா்களா? என்பதை வரைவு மற்றும் இறுதி வாக்காளா் பட்டியலை ஒப்பிட்டு தகவலை சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.
அதற்கு துவிவேதி, ‘சோ்க்கப்பட்டவா்கள் பெரும்பாலும் புதிய வாக்காளா்கள், நீக்கப்பட்டவா்கள் அதற்கு எதிராக புகாரோ, மேல்முறையீடோ செய்யவில்லை’ என்றாா்.
எதிா்க்கட்சிகளின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்கள் புதிதாக மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனரா என்பது யாருக்கும் தெரியாது?’ என்றாா்.
இதையடுத்து, இறுதியாக நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளா்களின் விவரங்களைத் தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.