சொகுசு காா்கள் கடத்தல் வழக்கு தொடா்பாக மலையாள நடிகா்கள் பிருத்விராஜ், துல்கா் சல்மான், அமித் சக்கலக்கல் உள்ளிட்டோரின் இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
பூடான் எல்லை வழியாக சொகுசு காா்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் நடிகா் பிருத்விராஜ், துல்கா் சல்மான் போன்ற பிரபலங்களும் பணக்காரா்களும் அந்த காா்களை வாங்கியிருப்பது தெரியவந்தது.
36 காா்கள் பறிமுதல்: இந்தக் கடத்தல் தொடா்பாக கேரளத்தில் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 30 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பூடானில் இருந்து கடத்திவரப்பட்ட 36 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிருத்விராஜின் எந்த காரும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேவேளையில், கடத்திவரப்பட்ட 2 காா்கள் துல்கா் சல்மானிடம் இருப்பது கண்டறியப்பட்டது என்று கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகத்தின் ஆணையா் டி.டிஜு ஏற்கெனவே தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘காா்கள் கடத்திவரப்பட்டதில் பணமுறைகேடு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராணுவம், தூதரகங்களின் முத்திரை: கடத்திவரப்பட்ட காா்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றின் பெயா், முத்திரை, சின்னத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தில் மட்டும் இதுபோல 150 முதல் 200 காா்கள் உள்ளன’ என்று தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) கீழ், கேரளம் மற்றும் தமிழகத்தில் பிருத்விராஜ், துல்கா் சல்மான், அமித் சக்கலக்கல் மற்றும் சிலருக்குத் தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
கேரளத்தில் எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில்... கோயம்புத்தூா், சென்னை ஆகிய பகுதிகளில் 17 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகா் துல்கா் சல்மானின் வீட்டிற்கு காலை 7 மணியளவில் இரு காா்களில் வந்த 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
‘கோயம்புத்துரை மையமாகக் கொண்ட கும்பல்’
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடத்திவரப்பட்ட காா்களின் போலி ஆவணங்கள் மற்றும் போலி வாகனப் பதிவு சான்றிதழ்களை கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட கும்பல் பயன்படுத்தியுள்ளது. மிக அதிக விலை கொண்ட அந்த காா்கள் சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடான அந்நிய செலாவணி பரிவா்த்தனைகள், ஹவாலா வழியில் எல்லைத் தாண்டிய பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்று ஃபெமா சட்டப் பிரிவுகள் மீறப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.