இந்தியாவில் பிரிட்டனைச் சேர்ந்த ஒன்பது பல்கலைக்கழக வளாகங்கள் திறக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக (அக். 8) இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தொழில் துறையினர் என 100-க்கும் மேற்பட்டோருடன் விமானம் மூலம் மும்பை வந்த ஸ்டார்மரை, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனிடையே, மும்பை ஆளுநர் மாளிகையில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸடார்மர் உடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதோடு கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்று நடவடிக்கையாக சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உள்பட 9 முன்னணி பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மரும் அறிவித்தனர். சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குருகிராம் வளாகம் ஏற்கெனவே திறக்கப்பட்டு, முதல் தொகுதி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த முயற்சி இந்தியா-பிரிட்டன் கல்வி ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்கப் படியைக் குறிப்பதோடு, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைகிறது. புதுமை, திறன் மேம்பாட்டை அதிகரிக்கக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை தொழில் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் அதேவேளையில், இந்திய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் உலகத்தரம் வாய்ந்த கல்வியை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரிட்டனின் 5 பிரபல பல்கலைக்கழகங்கள் முக்கிய இந்திய நகரங்களில் வளாகங்களை அமைக்க உறுதி பூண்டுள்ளன. சௌத்தாம்ப்டனைத் தவிர, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மும்பையில் ஒரு நிறுவன வளாகத்தைத் திறப்பதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. 2026ல் மாணவர்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமரின் இந்த வருகை இதுவரை இல்லாத மிகப்பெரிய பிரிட்டன் வணிகக் குழுவுடன் ஒத்துப்போகிறது, இது இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறக்குமதி செலவுகளைக் குறைப்பதோடு, இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, இரு நாடுகளிலும் உள்ள தொழில்கள் நுகர்வோருக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.