தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சுமார் 2,800 டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ’பசுமை வரி’ விதிக்கப்படுவதாக தெலங்கானா போக்குவரத்துக் கழகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, நகரப் பேருந்துகளின் பயணக் கட்டணம் திங்கள்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
இந்த பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி வியாழக்கிழமை காலை பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது.
பாரதிய ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் ரெதிஃபைல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலைப் போக்குவரத்துக் கழகம் வரை நகரப் பேருந்தில் பயணிக்கும் வகையில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளித்த பிறகு, கே.டி. ராமா ராவ் செய்தியாளர்களை சந்திக்க இருந்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கச்சிபௌலியில் உள்ள இல்லத்தில் கே.டி. ராமா ராவ், கோகபேட்டில் உள்ள இல்லத்தில் ஹரீஷ் ராவையும் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிஆர்எஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, குத்புல்லாபூர் எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.