மத்திய பிரதேச மாநில்தில் ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், மருந்து பாதுகாப்பு நடைமுறையில் முறையான சீா்திருத்தத்துக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளரை மத்திய பிரதேச போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், மருந்து பாதுகாப்பு நடைமுறையில் உரிய சீா்திருத்தத்துக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் அவசரகதியில் இந்த மனுவை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களான தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அதோடு, மாநிலங்களில் இதுபோன்ற விவகாரங்களைக் கையாள முறையான சட்ட அமலாக்க நடைமுறைகளும் அமலில் உள்ளன. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.