குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளா் ரங்கநாதன் கோவிந்தனை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மத்திய பிரதேச மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. தமிழகம் வந்த அந்தக் குழு, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவன உரிமையாளா் ரங்கநாதன் கோவிந்தனை கைது செய்து மத்திய பிரதேசம் அழைத்துச் சென்றது. சிந்த்வாரா மாவட்டம் பராசியா நகரில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ரங்கநாதன் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவா் ஜிதேந்திர ஜாட் கூறுகையில், ‘ரங்கநாதனை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பராசியா கூடுதல் அமா்வு நீதிபதி கெளதம் குா்ஜாா் முன்னிலையில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, ரங்கநாதனை 10 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்’ என்றாா். மேலும், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது’ என்றும் அவா் கூறினாா்.