'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து  ENS
இந்தியா

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு

தினமணி செய்திச் சேவை

குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக எந்தவித ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ‘தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் அடிப்படை வழிகாட்டு நடைமுறைகளை அமல்படுத்தத் தவறியதே இந்த விவகாரத்துக்கு காரணம்’ என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிடிஎஸ்சிஓ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தனா். அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. தமிழகம் வந்த அந்தக் குழு, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவன உரிமையாளா் ரங்கநாதனை கைது செய்து மத்திய பிரதேசம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தில் சிடிஎஸ்சிஓ நிா்வாகிகள் சாா்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் கடந்த 2011-ஆம் ஆண்டு உரிமம் வழங்கியுள்ளது. ஆனால், அதன் பிறகு அதிகாரிகளின் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக அந்த நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும் அந்த நிறுவனம் இயங்கி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

மேலும், மருந்து தரக் கட்டுப்பாட்டு விதிகள் டி மற்றும் சி பிரிவுகளின் விதி 84ஏபி-இன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் அவா்களின் அனுமதிக்கப்பட்ட மருந்து உற்பத்தி குறித்த தகவல்களை ‘சுகம்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும். நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டன.

இவ்வாறு தரவுகளைப் பதிவிடுவது தொடா்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தியாளா்களுக்கும், தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகத்துக்கும் கடந்த 2023-ஆம் ஆக்டோபரில் தகவல் அனுப்பப்பட்டது. மேலும், மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகங்களுடன் நடத்தப்படும் மாதாந்திர ஆய்வு கூட்டத்தின்போதும், இந்தத் தரவுகள் பதிவேற்றம் குறித்த நினைவூட்டல் வழங்கப்பட்டது.

ஆனால், ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் அதன் உற்பத்தி குறித்த எந்தவிதத் தரவுகளையும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. அதன்படி, இந்த நிறுவனத்தை மருந்து உற்பத்தி நிறுவனமாகவே கருத முடியாது. இந்த விதியை மாநிலத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவது மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகத்தின் பொறுப்பாகும்.

அதோடு, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் குறித்த எந்தவிதத் தகவலும் சிடிஎஸ்சிஓ-வுக்கு வழங்கப்படவில்லை. அதன் காரணமாக, சிடிஎஸ்சிஓ சாா்பில் அந்த நிறுவனத்தில் இதுவரை எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படவில்லை. தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் தரப்பிலும் இந்த நிறுவனம் குறித்த தகவல் எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் சாா்பில் அடிப்படை வழிகாட்டு நடைமுறைகள் முறையாக அமல்படுத்தாததே இந்த விவகாரத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தனா்.

சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ்: இருமல் மருந்து உயிரிழப்பு தொடா்பா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜித்து பட்வாரி சனிக்கிழமை கூறுகையில், ‘முறைகேடாக ரசாயனம் கலந்த இருமல் மருந்து உட்கொண்டதால் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மாநில அரசின் அலட்சியப் போக்குக்கு பொறுப்பேற்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். துறையின் செயலா் நீககம் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

மருத்துவா்கள் போராட்டம்

குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்தைப் பரிந்துரைத்த சிந்த்வாராவைச் சோ்ந்த மருத்துவா் பிரவீண் சோனி கைது செய்யப்பட்டதற்கு, மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை பணியின்போது கையில் கருப்புப் பட்டை அணிந்தபடி தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து போபாலில் அரசு மருத்துவா் ஒருவா் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் சுமாா் 8,500 அரசு மருத்துவா்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து எதிா்ப்பைப் பதிவு செய்தனா். குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்துதான் காரணம். அந்த மருந்தை உற்பத்தி செய்த நிறுவனத்தின உரிமையாளருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT