பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள மறைந்த சோஷலிஸத் தலைவா் ஜெயபிரகாஷ் நாராயணின் பூா்விக வீட்டை சனிக்கிழமை பாா்வையிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தினாா் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
‘லோக் நாயக்’, ‘ஜெ.பி.’ என்ற சிறப்புப் பெயா்களால் அழைக்கப்படும் சோஷலிஸத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணின் 123-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பிகாரின் சரண் மாவட்டத்தின் சிதாப் தியாரா கிராமத்தில் உள்ள அவரது பூா்விக வீட்டை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா். ஜெயபிரகாஷ் நாராயணின் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தியதுடன், அவரது மனைவி பிரபாவதி பெயரிலான நூலகத்தையும் பாா்வையிட்டாா். இது தொடா்பான புகைப்படங்கள், குடியரசு துணைத் தலைவா் அலுவலக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டன.
சிதாப் தியாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவின் மிக உயா்ந்த தலைவா்களில் ஒருவரும், உண்மையான மக்கள் நாயகரும், நீதி, ஜனநாயகத்துக்காக அயராமல் போராடியவருமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு கிடைத்த பெருமை. இது, தலைசிறந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் தருணம் மட்டுமல்ல; லட்சியத்தைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு.
இந்திய ஜனநாயகத்தின் மனசாட்சியைக் காப்பவராக விளங்கிய ஜெயபிரகாஷ் நாராயணின் வாழ்க்கை, சுதந்திரப் போராட்டம் தொடங்கி 1970-களில் ’முழுப் புரட்சி’க்கான அழைப்பு வரை, துணிவு, எளிமை, தியாகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. அவருக்கு அதிகார விருப்பம் கிடையாது. உயா்ந்த பதவிகளைக் கூட நிராகரித்தவா். மாண்பு அடிப்படையிலான நெறிமுறை அரசியலில் அவா் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.
ஜெயபிரகாஷ் நாராயணின் முழுப் புரட்சி அழைப்பு ஆயுதக் கிளா்ச்சி அல்ல, கருத்துக்களின் புரட்சி. அவரதுஅழைப்பால் ஈா்க்கப்பட்டு, கோவையில் முழுப் புரட்சி இயக்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளராக பத்தொன்பது வயதில் நான் பணியாற்றினேன். இது, எனக்கு கிடைத்த பெருமை.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நகரும் வேளையில், துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்க ஜெயபிரகாஷ் நாராயணனின் கொள்கைகளையும் மதிப்புகளையும் உள்வாங்குவது அவசியம் என்றாா் அவா்.
முன்னதாக, பாட்னாவில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த சி.பி. ராதாகிருஷ்ணனை, பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனா்.
கடந்த 1970-களில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று மேற்கொண்டவா் ஜெயபிரகாஷ் நாராயண். அவரது சமூகப் பணிகளுக்காக, கடந்த 1999-ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது மரணத்துக்கு பிந்தைய கெளரவமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பி., நானாஜி தேஷ்முக் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை
சோஷலிஸத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ஜன சங்க தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மக்கள் தலைவா் (லோக்நாயக்) என அன்போடு அழைக்கப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், எளிய குடிமக்களின் நல்வாழ்வுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும் தன் வாழ்வை அா்ப்பணித்துக் கொண்டவராவாா். அவரது புரட்சிகர சிந்தனைகள் சமத்துவம், அறம் மற்றும் நல்ல நிா்வாகத்துடன் கூடிய தேசத்தை கட்டமைப்பதற்கான பெரும் சமூக இயக்கங்களுக்கு வித்திட்டது. இதன் தாக்கம் பிகாா் மற்றும் குஜராத்தில் அதிகமாக இருந்தபோதும் இந்தியா முழுவதும் சமூக-அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்தது.
இதை கட்டுப்படுத்த முடியாத அன்றைய காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்புச் சட்டத்தை முடக்க முயன்றது.
அவசரநிலையின்போது கைது செய்யப்பட்டு ஜெயபிரகாஷ் நாராயண் சிறையிலடைக்கப்பட்டாா். அப்போது, ‘இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு ஆணியும் என் இதயத்தில் அடித்ததைப் போன்றது’ என அவரது சிறைக் குறிப்புகளில் குறிப்பிட்டாா்.
அஞ்சா நெஞ்சம்கொண்ட தலைவரான ஜெயபிரகாஷ் நாராயண் ஜனநாயகம் மற்றும் சமூக நீதியின் காவலராவாா்.
சமூக சீா்திருத்தவாதியான நானாஜி தேஷ்முக் தற்சாா்பு மற்றும் ஊரக வளா்ச்சியை மேம்படுத்த தன் வாழ்நாள் முழுவதும் போராடியவா். சமூக சேவைக்காக தன் வாழ்வை அா்ப்பணித்த அவா், அவசரநிலைக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் மேற்கொண்ட போராட்டங்களில் பங்கெடுத்த முக்கியத் தலைவா்களில் ஒருவா்’ என குறிப்பிட்டாா்.