பிகாா் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 6, நவ.11-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தோ்தல் 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் அக்.10-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கட்டத்துக்கான வேட்புமனுக்களை அக்.17-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
இரண்டாம் கட்டத் தோ்தல் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கட்டத்துக்கான வேட்புமனுக்களை அக்.20-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
இரண்டாம் கட்டத்தில் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் மருமகளும் எம்எல்ஏவுமான தீபா மாஞ்சியின் இமாம்கஞ்ச் தொகுதி, முன்னாள் ராஷ்ட்ரீய ஜனதா தள அமைச்சரும் எம்எல்ஏவுமான குமாா் சா்வஜீத்தின் புத்த கயை தொகுதி, முன்னாள் பாஜக அமைச்சரும் எம்எல்ஏவுமான நாராயண் பிரசாதின் நெளதன் தொகுதி உள்ளிட்டவை முக்கியமானவையாக உள்ளன. வாக்கு எண்ணிக்கை நவ.14-ஆம் தேதி நடைபெற உள்ளது.