புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளக் கோரியும், அணையை செயலிழக்கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது முல்லைப் பெரியாறு அணை பழைமையான அணைகளில் ஒன்று என்று தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி. கிரி, இது 130 ஆண்டுகள் பழைமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இருப்பினும், அணையில் உள்ள சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டினார். அணை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் லட்சக்கணக்கான மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.
அப்போது, தலைமை நீதிபதி கவாய், அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழகம், கேரள அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.