செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைப்பதற்காக ஆந்திர அரசு- கூகுள் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் உள்ளிட்டோருடன் தற்படம் எடுத்துக்கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.  
இந்தியா

ரூ.1.33 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுளுடன் ஆந்திரம் ஒப்பந்தம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம்...

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு இதுவாகும்.

அதானி குழுமமும், ஏர்டெல் நிறுவனமும் கூகுளுடன் இணைந்து கட்டமைக்கும் இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புது தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் சேவையின் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தரவு மையமானது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரத்துக்கு அடித்தளமாக இருக்கும். அத்துடன் இந்த மையம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையமாக விளங்கும்.

இது மட்டுமன்றி கூகுளின் கடல்வழி இணைய கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் மையமும் விசாகப்பட்டினத்தில் செயல்படும். இது நாட்டின் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும். இதன்மூலம், உலகையே இணைத்து வசுதைவ குடும்பக (உலகமே ஒரு குடும்பம்) உணர்வை இந்தியா உயிர்ப்பித்துள்ளது.

இது கூகுளின் திட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் திட்டமுமாகும். இதன்மூலம் நாட்டின் செயற்கை நுண்ணறிவுப் பயணம் தொடங்கியுள்ளது. அதை ஆந்திரம் வழிநடத்தும்.

இந்தியாவில் வருங்கால தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரதம்...: பிரதமர் மோடி "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆந்திரத்தின் ஆற்றல்வாய்ந்த விசாகப்பட்டினம் நகரில் கூகுள் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த பன்முக முதலீடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது. இது தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் சக்திவாய்ந்த ஆற்றலாக இருப்பதுடன், அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும். அத்துடன் நாட்டின் எண்ம பொருளாதாரத்தை மேம்படுத்தி, உலகளாவிய தொழில்நுட்பத் தலைமை பீடத்தில் இந்தியாவின் இடத்தை உறுதி செய்யும்' என்றார்.

இந்தியா முழுவதும் வளர்ச்சி

கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "விசாகப்பட்டினம் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் மூலம், தொழில்துறையில் முன்னணியில் உள்ள தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்குக் கொண்டு செல்லப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தி, இந்தியா முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்தப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் வெப்பம்... அனைரா குப்தா!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் புதிய சாதனை நிகழ்த்திய ரொனால்டோ!

எழுத்து அணிந்த கவிதை... மோனாமி கோஷ்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களுடன் ஜேடியு முதல் பட்டியல் வெளியீடு!

மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT