கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை 14 சதவீதம் அளவுக்கு இந்தியா குறைத்துள்ளதாக ஐரோப்பிய எரிபொருள் ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
எனினும், ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தொடர்கிறது.
கடந்த 2022 ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ஐரோப்பிய நாடுகள் பல ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தின. இதனால் ரஷியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்ததால், அந்நாட்டிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரித்தது.
இதையடுத்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது. எனவே, இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஏற்கெனவே 25 சதவீதம் பதிலடி வரி விதிக்கப்படும் நிலையில் மொத்தம் 50 சதவீதம் வரை இந்திய பொருள்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியது. இது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐரோப்பிய எரிபொருள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் போருக்கு முன்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் ரஷியாவின் பங்களிப்பு ஒரு சதவீதமாக இருந்தது. பின்னர் மிகவும் குறைந்த காலகட்டத்தில் படிப்படியாக உயர்ந்து 40 சதவீதம் வரை எட்டியது. ஆனால், கடந்த சில மாதங்களாக ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.25,600 கோடி மதிப்பில் ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் குறைவாகும்.
ஒரு நாளுக்கு 16 லட்சம் பேரல் வரை கொள்முதல் செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இது படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் ரஷிய கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கும், ஜி7 கூட்டமைப்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சந்தை விலையைவிட ஒரு பேரலுக்கு 20 சதவீதம் வரை குறைவான விலையில் ரஷியா கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. இது இந்தியாவுக்கு பெரிதும் லாபகரமானது என்பதால் கொள்முதலை அதிகரித்தது. கச்சா எண்ணெய் மட்டுமல்லாது நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களையும் ரஷியாவிடம் இந்தியா அதிகம் கொள்முதல் செய்கிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா சற்று குறைத்திருந்தாலும் அதன் மொத்த கொள்முதல் சற்று உயர்ந்தே உள்ளது. இதன் மூலம் பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரித்துள்ளது தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.