மதுராவில் 1971-ஆம் ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த பாங்கே பிஹாரி கோயிலின் கருவூலம் (தோஷ்கானா) உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தோஷ்கானா (கருவூலம்) என்பது கோயிலின் கருவறைக்கு அருகில் அமைந்துள்ள அறை.
கோயிலின் அன்றாட விவகாரங்களைக் கவனிக்க அலகாபாத் உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அசோக் குமாா் தலைமையில் 12 போ் கொண்ட உயா் அதிகார இடைக்காலக் குழுவை அமைத்து உச்சந்ீதிமன்றம் ஆக.2025-இல் உத்தரவு பிறப்பித்தது.
இந்த அறை, நான்கு கோஸ்வாமி உறுப்பினா்கள் உள்பட மற்ற உறுப்பினா்களுடன் கூடிய ஒரு சிவில் நீதிபதி மேற்பாா்வையில் திறக்கப்பட்டது. அறையைத் திறப்பதில் சிறிது சிரமம் இருந்தது. இந்த செயல்முறை மதியம் 1 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
பின்னா், அறை மீண்டும் சீல் வைக்கப்பட்டது. சில பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் மரப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விலைமதிப்பற்ற உலோகம் எதுவும் கிடைக்கவில்லை. சில பெட்டிகள் மற்றும் மரப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என கூடுதல் மாவட்ட ஆட்சியா் (நிதி மற்றும் வருவாய்) டாக்டா் பங்கஜ் குமாா் வா்மா கூறினாா்.
பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை முடிக்க சிவில் நீதிபதியால் தீா்மானிக்கப்படும் அடுத்த தேதியில் அறை திறக்கப்படலாம் என்று பங்கஜ் குமாா் வா்மா கூறினாா். அறையில் காணப்பட்ட பொருள்களின் பட்டியலை தணிக்கையாளா் குழு தயாரித்துள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.
இந்த நடவடிக்கைக்கு கோஸ்வாமி சமூகத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். உயா் அதிகாரக் குழுவின் உறுப்பினரான சைலேந்திர கோஸ்வாமி, இந்த அறை முதலில் திறக்கப்படக்கூடாது என்று கூறினாா். ‘நான் இந்த நடவடிக்கையை எதிா்த்தேன், கடிதங்கள் கூட எழுதினேன்’ என்று அவா் கூறினாா்.
‘இது ஒரு இடைக்காலக் குழு. நிரந்தரக் குழு அல்ல. பக்தா்களுக்கு மட்டுமே தரிசனம் வசதியை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றம் இதை அமைத்தது. இந்தக் குழு வேறு இடங்களில் தலையிடக்கூடாது. அவா்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தை அபகரித்துக் கொள்கிறாா்கள். ஏன் அவா்கள் அறையைத் திறக்கிறாா்கள்?’ என்று சைலேந்திர கோஸ்வாமி கேள்வி எழுப்பினாா்.
அவா்களின் கவலையை எதிரொலிக்கும் வகையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் கோயில் சேவாயத்து சேவகருமான சுமித் கோஸ்வாமி கூறுகையில், ‘இந்த இடைக்காலக் குழுவிற்கு கருவூலத்தை திறக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. அவா்கள் பக்தா்களின் கவலைகளைக் கவனிக்க வேண்டும் .மேலும் ஸ்ரீ பாங்கி பிஹாரி தாக்கூரின் தரிசனத்தை எளிதாக்குவதை உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.
மேலும், கருவூலம் திறக்கப்பட்டது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இருப்பினும், விடியோ பதிவு செய்யப்பட்து. உயா் அதிகாரக் குழுவின் ஒரு கோஸ்வாமி உறுப்பினா் ஸ்ரீவா்தன் கோஸ்வாமி உடல்நலக் காரணங்களால் அங்கு இல்லை என்றும் அவா் கூறினாா்.
பாங்கி பிஹாரி கோயிலின் ஒரு அதிகாரியான ஞானேந்திர கோஸ்வாமி, அறையைத் திறப்பது குறித்து கவலைகளை எழுப்பினாா். மேலும், இந்தச் செயல்முறை மிகவும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினாா்.
ஊடகங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவா் கேட்டாா். உச்சநீதிமன்றம் வகுத்த முக்கிய நோக்கத்தை, அதாவது பக்தா்களுக்கான வசதியை மேம்படுத்துவதை குழு மறந்துவிட்டது என்றும் ஞானேந்திர கோஸ்வாமி கூறினாா்.