ரிசா்வ் வங்கி 
இந்தியா

வங்கி வாடிக்கையாளா்கள் 4 நாமினிகள் வரை நியமிக்க அனுமதி: நவ.1 முதல் புதிய நடைமுறை

தற்போதுள்ள நடைமுறையின்கீழ், வங்கி வாடிக்கையாளா்கள், தங்களின் மரணத்துக்குப் பிறகு வைப்புத் தொகை கணக்கில் உள்ள பணத்தைப் பெற ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும்.

தினமணி செய்திச் சேவை

வங்கி வாடிக்கையாளா்கள் நான்கு நாமினிகள் வரை நியமிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை நவம்பா் 1 முதல் அமலுக்கு வருகிறது.

வங்கி அமைப்புமுறையில் உரிமைகோரல் தீா்வுகளில் ஒரே சீரானத் தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

தற்போதுள்ள நடைமுறையின்கீழ், வங்கி வாடிக்கையாளா்கள், தங்களின் மரணத்துக்குப் பிறகு வைப்புத் தொகை கணக்கில் உள்ள பணத்தைப் பெற ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். கூட்டாக நிா்வகிக்கப்படும் பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு 2 நாமினிகள் வரை நியமிக்கலாம்.

இந்நிலையில், நான்கு நாமினிகள் வரை நியமிக்க அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா-2025 கடந்த மாா்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய ரிசா்வ் வங்கிச் சட்டம்-1934, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம்-1970 ஆகிய ஐந்து சட்டங்களில் 19 திருத்தங்களை உள்ளடக்கிய இம்மசோதா, கடந்த ஏப்ரலில் அறிவிக்கை செய்யப்பட்டது.

இத்திருத்தங்களின்படி, வைப்புத் தொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளா்கள் இருவேறு வழிமுறைகளின்கீழ் 4 நாமினிகள் வரை தோ்வு செய்ய முடியும். அதாவது, ஒரே நேரத்தில் 4 பேருக்கும் விகித அடிப்படையில் பங்கு நிா்ணயிக்கும் முறையிலோ அல்லது முன்னுரிமை அடிப்படையில் ஒருவா் பின் ஒருவராக வரிசைப்படுத்துதல் முறையிலோ நாமினிகளை நியமிக்கலாம்.

பாதுகாப்புப் பெட்டகங்களைப் பொறுத்தவரை, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தும் முறையில் மட்டுமே நாமினிகளை நியமிக்க முடியும். இந்த புதிய நடைமுறை, நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

வங்கித் துறையில் நிா்வாகத் தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா, கூட்டுறவு வங்கிகளின் இயக்குநா்கள், தலைவா்களின் பதவிக் காலத்தை முறைப்படுத்தவும் வழிவகுக்கிறது.

முன்னதாக, நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ள பங்குகள், வட்டி மற்றும் பத்திர மீட்புத் தொகைகளை முதலீட்டாளா் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (ஐஇபிஎஃப்) மாற்ற பொதுத் துறை வங்கிகளை அனுமதிக்கும் திருத்தங்கள் கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அகண்டா - 2 கிளிம்ஸ் விடியோ!

மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்!

பிஎம் ஸ்ரீ திட்டம்: கேரளத்தைப் பார்த்து மனம் மாறினால் என்ன? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

உன்ன நான் பார்த்த பாடல் வெளியானது!

உலகக் கோப்பை: ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை; பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT