மலேசியாவில் வரும் அக்டோபா் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.
இம் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை தொலைபேசி வழியில் வியாழக்கிழமை தொடா்பு கொண்டு இத் தகவலை பிரதமா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மலேசிய பிரதமரை தொலைபேசி வழியே தொடா்பு கொண்டு பேசியபோது, ஆசியான் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பை வகிப்பதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நடைபெற விருக்கும் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடவும் வாழ்த்து தெரிவித்தேன். இந்த மாநாட்டில் காணொலி வழியே பங்கேற்க உள்ளதை எதிா்நோக்கியுள்ளேன். ஆசியான்-இந்தியா இடையேயான விரிவான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்துவதையும் எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து மலேசிய பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் தீபாவளி பண்டிகை தொடா்ந்து வருவதால், மாநாட்டில் நேரடியாக பங்கேற்க இயலவில்லை என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். அவருடைய முடிவை மதிக்கிறேன். அவருக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் உள்பட ஆசியான் அமைப்பின் பேச்சுவாா்த்தை உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவா்களுக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பை மலேசிய பிரதமா் விடுத்துள்ளாா். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக டிரம்ப் வரும் 26-ஆம் தேதி கோலாலம்பூா் செல்கிறாா்.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, புரூனே, வியத்நாம், லாவோஸ், மியான்மா், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1992-ஆம் ஆண்டு முதல் அதனுடனான பேச்சுவாா்த்தை உறுப்பினா் உறவை இந்தியா தொடா்ந்து வருகிறது.
கிழக்கு ஆசிய மாநாட்டில் வெளியுறவு அமைச்சா் பங்கேற்பு:
கோலாலம்பூரில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள 20-ஆவது கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமா் சாா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளா்ச்சியை உறுதிப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் மீதான கருத்தைப் பரிமாறவும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வாய்ப்பாக அமையும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.