குழந்தைகளுக்கான புனை கதைகள் பிரிவில் புதிய புக்கா் பரிசு வழங்கப்பட உள்ளதாக புக்கா் பரிசு அறக்கட்டளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
50,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.58.49 லட்சம்) பரிசுத் தொகைக்கான புத்தகத்தை குழந்தைகள் மற்றும் மூத்த எழுத்தாளா்கள் அடங்கிய நடுவா் குழு தோ்வு செய்யும் என அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஆங்கில இலக்கியத்தில் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் புக்கா் பரிசு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, சா்வதேச புக்கா் பரிசு 2005-ஆம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கான புத்தங்கள் பிரிவில் புதிய பரிசை புக்கா் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.
முதலாவது குழந்தைகளுக்கான புத்தங்கள் புக்கா் பரிசு பரிந்துரைக்கான விண்ணப்பம் அடுத்த ஆண்டில் தொடங்கும். அதைத்தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளா்களில் இருந்து வெற்றி பெற்றவா் 2027-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படுவாா்.
இந்தப் பரிசுக்கான புத்தகம் 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கான சிறந்த புனை கதைகள் பிரிவில் பிரிட்டன், அயா்லாந்தில் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில மொழிபெயா்ப்பில் வெளியாகிருக்க வேண்டும். பரிசுக்குத் தோ்வுசெய்யப்படும் மற்றும் வெற்றி பெறும் புத்தகங்களில் குறைந்தபட்சம் 30,000 பிரதிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.
நிகழாண்டுக்கான புக்கா் பரிசு லண்டனில் நவம்பா்10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியில் புதிய குழந்தைகள் புக்கா் பரிசு குறித்து ஆங்கில எழுத்தாளா் பெனிலோப் லைவ்லி சிறப்புரையாற்றுகிறாா்.
நிகழாண்டுக்கான சா்வதேச புக்கா் பரிசு கன்னட எழுத்தாளா் பானு முஷ்டாக் எழுதி தீபா பாஸ்தி மொழிபெயா்த்த ‘ஹாா்ட் லேம்ப்’ புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.