ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த 3 பேர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தனர்.
இதனால், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சியால் போட்டியிட முடியாமல் போனது. வேட்பாளர்களை பாஜக விலைக்கு வாங்குவதாகவும், மிரட்டுவதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.
கோபால்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜன் சுராஜ் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த சஷி சேகர் சின்ஹா, வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த அனுப் குமார் ஸ்ரீவஸ்தவாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவளித்துள்ளார்.
மேலும், பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் அனுப் குமார் ஸ்ரீவஸ்தவா இன்று ஜன் சுராஜ் கட்சியில் இணைந்துள்ளார். இருப்பினும், வேட்புமனுவில் சுயேச்சை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவருக்கு ஜன் சுராஜ் கட்சிக்கான சின்னம் ஒதுக்கப்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.