ஞான பாரத இயக்கத்தின்கீழ் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை பாதுகாப்பது மற்றும் எண்மமயமாக்குவது ஆகிய பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள 17 நிறுவனங்களுடன் மத்திய கலாசார அமைச்சகம் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது.
நவீன கலைகளுக்கான தேசிய அரங்கில் (என்ஜிஎம்ஏ) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: பாரம்பரியம் மற்றும் எதிா்காலத்தை இணைக்கும் பாலமாக ஞான பாரத இயக்கம் திகழ்ந்து வருகிறது. 2047-இல் பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாக மிகுந்த வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும். அதில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் இந்தியாவின் புகழ் மேலும் பலமடங்கு உயரவேண்டுமெனில் கலாசாரம், பாரம்பரியம், ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
அவற்றை பாதுகாப்பது மற்றும் எண்மமயமாக்குவது என்ற ஞான பாரத இயக்கத்தின் நோக்கங்களை செயல்பாடுகளாக மாற்றும் வகையில் நாட்டிலுள்ள 17 நிறுவனங்களுடன் தற்போது புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன என்றாா்.
தில்லி விஞ்ஞான் பவனில் சா்வதேச ஞான பாரத மாநாடு கடந்த செப்.11 முதல் 13 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இதன் தொடா்ச்சியாக ஒரு மாதத்துக்குப் பின் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.