புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியவர் மீது வழக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்டது தொடர்பான முறையீடு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மாலா பக்சி அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற அமர்வில், கோஷம் எழுப்பியது, காலணி வீசியது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிதான், இந்த வழக்கைத் தொடர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புவது, தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய வழக்குரைஞருக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளிக்கவே உதவும். மேலும் அந்த சம்பவத்தின் ஆயுளை அதிகரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் இயற்கையான மரணத்தை அடைய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அதாவது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தன் மீது காலணி வீசிய வழக்குரைஞர் ராகேஷ் கிஷோரை மன்னிப்பதாகக் கூறியதால் அவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், இதுபோன்ற காலணி வீச்சு சம்பவங்கள், வேறு நீதிமன்றங்களில் ஏதேனும் நடந்திருக்கிறதா என்று தரவுகளை பட்டியலிட்டுத் தருமாறும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் என்பது, மற்றவர்களின் மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையக் கூடாது, இது ஒழுங்குப்படுத்தப்படாத சமூக வலைத்தளங்களில் அபாயத்தை ஏற்படுத்தும், இதுபோன்ற சம்பவங்கள் வேறெதுவும் இல்லை, பணம் சுரண்டும் முயற்சிகள் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
அக். 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராகேஷ் கிஷோரின் வழக்குரைஞர் உரிமத்தை இந்திய பார் கவுன்சில் நீக்கியிருந்தது.
இந்த சம்பவம் நடந்தபோதே, விட்டுவிடுங்கள், வேலையைத் தொடரலாம் என்று நீதிமன்ற அறையில் பி.ஆர். கவாய் கூறியிருந்தார். இதுபோன்ற சம்பவங்களுக்காகக் கவலைப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க... ஷ்ரேயாஸ் ஐயருக்கு உள் ரத்த கசிவு! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.