தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையம் இன்று (அக். 27) அறிவித்தது.
இதனையடுத்து, சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பு தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் மாலை 6 மணி முதல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டின் வாக்குரிமையைப் பாதுகாக்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்த திமுக-வின் எக்ஸ் பதிவில், ``இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு.
பிகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை எஸ்ஐஆர் மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம், தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் திமுக-வுக்கு என்றும் உண்டு.
எனவே, எஸ்ஐஆர் எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக நாளை (அக். 10) காலை 9 மணியளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் கழகத் தலைவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களின் வாக்குரிமையைக் காப்போம் - எதேச்சதிகாரத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்கினால், போராட்டங்கள் நடத்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.