ஆந்திர கடற்கரையில் கரையைக் கடந்து பின்னர் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரவுள்ள மோந்தா புயலுக்கான தயார் நிலையை மதிப்பிடுவதற்காக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி புவனேஸ்வரியில் உள்ள லோக்சேவா பவனில் உயர்நிலை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜா, எஸ்ஆர்சி டிகே சிங், டிஜிபி யோகேஷ் பகதூர் குரானியா, தீயணைப்பு சேவைகள் டிஜி சுதான்ஷு சாரங்கி, ஐஎம்டி இயக்குநர் மனோரமா மொஹந்தி மற்றும் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களும் ஆயத்தநிலை மறுஆய்வுக் கூட்டத்தில் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது. ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவின் பல கடலோர மாவட்டங்களில் இன்று காலை ஏற்கெனவே பலத்த மழை பெய்து வருகிறது.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கடல் சீற்றம், பலத்த காற்று மற்றும் மழை பெய்துவருகின்றது. அதே நேரத்தில் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் மழை பெய்தது.
மோந்தா புயல் கிழக்கு கடற்கரையை நெருங்கி வருவதால், கடலோரப் பகுதிகளில் உயிர்களைப் பாதுகாக்கவும் சேதங்களைக் குறைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.